×

வெடிகுண்டுகள், கத்தி உள்பட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்: ஆந்திராவில் தேர்தலை சீர்குலைக்க திட்டமா?

திருமலை: ஆந்திராவில் கட்டுமான பணி நடைபெறும் வீட்டில் வெடிகுண்டுகள், கத்திகள், கோடாரிகள் உள்பட பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். தேர்தலை சீர்குலைக்க இவை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் வரும் 13ம்தேதி சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திரமோடி மற்றும் ஆந்திர முதல்வர் ெஜகன்மோகன், முன்னாள் முதல்வர் சந்திரபாபு, நடிகர் பவன்கல்யாண், காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் ஷர்மிளா உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பல்நாடு மாவட்டம் மச்செர்லா சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்டது ஜங்கமேஸ்வரபாடு கிராமம். இங்கு ஒரு புதிய வீட்டின் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த வீட்டில் பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக நேற்று அப்பகுதி மக்கள் துர்க்கி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் அந்த வீட்டை சோதனையிட்டனர். சோதனையில் 17 நாட்டு வெடிகுண்டுகள், 3 கத்திகள், 9 கோடாரிகள் மற்றும் ஏராளமான இரும்பு ராடுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து வீட்டின் உரிமையாளரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆந்திராவில் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் தேர்தலை சீர்குலைக்க யாரேனும் திட்டமிட்டு வீட்டில் பயங்கர ஆயுதங்களை பதுக்கினார்களா? அல்லது எதற்காக இங்கு வெடிகுண்டு மற்றும் பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது? இதில் தொடர்புடையவர்கள் யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் நேரத்தில் பயங்கர ஆயுதங்கள் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post வெடிகுண்டுகள், கத்தி உள்பட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்: ஆந்திராவில் தேர்தலை சீர்குலைக்க திட்டமா? appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Tirumala ,Andhra ,
× RELATED கட்டுமான பணிகள் நடைபெறும் வீட்டில்...